தாய் மொழி என்றால் என்ன?

கருப்பி வந்தாள்! நீண்ட நாட்களுக்குப் பின் கருப்பி என்னை பார்க்க வந்தாள்.
கருப்பியைக் கண்ட உடன் அவள் அழகை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டேன்...
பழையபடி, "கருப்பி, நீ பேரழகி! ஆனால் பார்வையில் அழகுள்ளோரைத் தவிர உன் அழகு எவருக்கும் தெரியாது" என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவள் கத்த ஆரம்பித்து விட்டாள். பழைய படியே உளறாதே, புதிதாய் ஏதாச்சும் என்னிடம் கூறு என்றாள்.
நக்கலாய் சொன்னாள், "இப்போதெல்லாம் உனக்கு தமிழில் எழுத வரவில்லையே" என்று.
சுருக்கென்று ஒரு சிந்தனை, "ஓம்லோ! நான் தமிழில் எழுதி மிச்ச நாளாகிறது?" கருப்பியைப் போலவே சிலரும் என்னை கேட்பதுண்டு, "தாய்மொழியில் இப்போதெல்லாம் எழுதுவதில்லை ஏன்?" என்று.
சிந்தித்துப் பார்த்தேன், தாய்மொழி என்றால் என்ன? பலரும் பல வகையான வரைவிலக்கணங்களை அங்கங்கே போடுவதுண்டு. நானும் சிந்தித்தேன். தாயின் மொழி தாய்மொழியோ? இல்லை, என் ஊரின் மொழி தாய்மொழியோ? இல்லை, நான் கல்வி கற்ற மொழி தாய்மொழியோ? இல்லை, நாம் முதன்முதலில் பேசிய மொழி தாய்மொழியோ? இல்லை, நான் வாழும் நாட்டின் மொழி தாய்மொழியோ? என்று நான் சிந்தனையாற்றில் மிதந்து கொண்டிருக்கும் போது...
"கா... கா..." என்று கதறி என்னை அதட்டினாள் கருப்பி.
"போடா! இது கூடவா தெரியவில்லை? நீ சிந்திக்கும் மொழிதான் தாய்மொழி" என்று கரைந்துகொண்டே சொல்லிவிட்டாள்.
என் சிந்தனையாற்று நீச்சல் அவள் கரையில் முடிந்தது.
சில நாட்களாக என் சிந்தனைமொழி மாறிவிட்டது போலும் அல்லது மாற்றிவிட்டார்கள் போலும். தொழிலும் தேவையும், கூடவே கிழக்கிந்திய கம்பெனியின் மிச்சமும்...
நம்மை தணகிய கருப்பியைப் பார்த்து சிலர் பழக்கிய தோஷத்தில் கல்லை விட்டு எறிவோம் என்று கை நமநமத்து...
இல்லை, கருப்பி பேரழகி! பண்டா கரடியும், பர்ஷியன் பூனையும், பொமேரியன் நாயும் வெளி அழகு மட்டும்தான் அழகு என்று கற்பிக்கும் இந்த உலகில், என் கண்ணுக்கு இன்று ஏனோ கருப்பி வழக்கத்தைவிட பேரழகியாகத் தெரிந்தாள். கருப்பி, ஒவ்வொரு முறையும் ஏதாச்சும் கற்றுத் தருகிறாய், கருப்பி நீ பேரழகி!
என் முகஸ்துதி பிடிக்காமல் அவள் பறந்துவிட்டாள்.
Share this article
Generate a story card or copy link to clipboard

Saadh Jawwadh
Define Your Circle
They, You, Love and Change
Define Your Circle
They, You, Love and Change
There was a time when even a simple notification could make my day special